Thursday, September 25, 2014

நான்மணிக்கடிகை- 81 முதல் 90 வரை



பாடல்-81

நல்லார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; நன்னெறிச்
செல்வார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; அல்லாக்
கடைகட்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; தம் கைத்து
உடையார்க்கும் எவ் ஊரும் ஊர்.


     கற்றார்க்கு எவ்வூரும் தம்மூர்; தவத்தோருக்கும் எவ்வூரும் தம்மூர்; கீழ்மக்கட்கும் எவ்வூரும் தம்மூர்; தம் கையிற் பொருளுடையாருக்கும் எவ்வூரும் தம்மூர்.

பாடல்-82

கல்லா ஒருவர்க்குத் தம் வாயில் சொல் கூற்றம்;
மெல் இலை வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம்;
அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்; கூற்றமே,
இல் இருந்து தீங்கு ஒழுகுவாள்.

     கல்வியறிவு இல்லாதவர்களுக்கு அவர் வாயில் பிறக்கும் சொல்லே அவர்களுக்குக் கூற்றுவனாம்; வாழை மரத்துக்கு அஃது ஈனும் குலையே கூற்றுவனாம்; தீயவை செய்வார்க்கு அறக்கடவுளே கூற்றுவனாம்; இல்லத்திலிருந்து கொண்டு கணவனறியாது கற்புக்கேடாக ஒழுகுபவள் கணவனுக்குக் கூற்றுவனாவாள்.

பாடல்-83

நீரான் வீறு எய்தும், விளை நிலம்; நீர் வழங்கும்
பண்டத்தால் பாடு எய்தும், பட்டினம்; கொண்டு ஆளும்
நாட்டான் வீறு எய்துவர், மன்னவர்; கூத்து ஒருவன்
பாடலான் பாடு பெறும்.


     விளைநிலம் நீர்ப்பாய்ச்சலாற் செழிப்படையும். துறைமுகப் பட்டினங்கள் கடல் வளத்தால் பெருமையடையும். மன்னர் தாம் ஆளும் நாட்டினாற் சிறப்படைவர். கூத்து வல்லவனால் நாடகம் சிறப்படையும்.

பாடல்-84

ஒன்று ஊக்கல், பெண்டிர் தொழில் நலம்; என்றும்
அறன் ஊக்கல், அந்தணர் உள்ளம்; பிறன் ஆளும்
நாடு ஊக்கல், மன்னர் தொழில் நலம்; கேடு ஊக்கல்,
கேளிர் ஒரீஇவிடல்.


     கணவரோடு ஒருமைப்பட்டு நிற்க முயலுதலே பெண்டிர்க்கு நல்ல செயல் ஆகும். அற நினைவுகளை எழுப்பிக் கொண்டிருத்தலே அந்தணருள்ளத்திற்குச் சிறப்பு செயல் ஆகும். பிறர் ஆளும் நாட்டைப் பெற முயலுதலே மன்னருக்கு உரிய செயலாகும். சுற்றத்தாரை நீக்கி வாழ்தல் கேட்டிற்கு முயலுதலாகும்.

பாடல்-85

கள்ளாமை வேண்டும், கடிய வருதலான்;
தள்ளாமை வேண்டும், தகுதி உடையன;
நள்ளாமை வேண்டும், சிறியாரோடு; யார்மாட்டும்
கொள்ளாமை வேண்டும், பகை.

சிறியாரோடு - சிற்றினத்தாரோடு

     கொடுந்துன்பங்கள் பின்பு உண்டாவதால் என்றும் திருடாமை வேண்டும். ஒழுக்கம் தவறாமை வேண்டும். சிற்றினத்தாரோடு சேராமை வேண்டும். பகைமை பாராட்டாமை வேண்டும்.

பெருக்குக, நட்டாரை நன்றின் பால் உய்த்து!
தருக்குக, ஒட்டாரைக் காலம் அறிந்தே!
அருக்குக, யார்மாட்டும் உண்டி! சுருக்குக,
செல்லா இடத்துச் சினம்.


     நண்பனை நன்மையின் பாற் செலுத்தி நல்வாழ்வில் உயர்த்துக; பகைவரைக் காலமறிந்து தாக்கி வெற்றிக் கொள்க; யாராயினும் அடுத்தடுத்து உண்ணுவதைத் தடுத்துக் கொள்ள வேண்டும். செல்லத் தகாத இடத்தில் சினத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.

பாடல்-87

மடிமை கெடுவார்கண் நிற்கும்; கொடுமைதான்
பேணாமை செய்வார்கண் நிற்குமாம்; பேணிய
நாணின் வரை நிற்பர், நற் பெண்டிர்; நட்டு அமைந்த
தூணின்கண் நிற்கும், களிறு.


     கெடுவானிடத்தில் சோம்பல் இருக்கும். சான்றோர் விரும்பாதவற்றைச் செய்பவர் தீமையை அடைவர். நல்லியல்புடைய மகளிர் 'நாணம்' என்னும் எல்லையில் நிற்பர். யானை தூண் வலுவில் நிலை பெறும்.

பாடல்-88

மறை அறிப, அந்தண் புலவர்; முறையொடு
வென்றி அறிப அரசர்கள்; என்றும்
வணங்கல் அணிகலம் சான்றோர்க்கு; அஃது அன்றி,
அணங்கல் வணங்கின்று, பெண்.


     அந்தணர்கள் மறை அறிவர். அரசர் முறையும், வெற்றியும் அறிவர். சான்றோர்க்கு அணிகலம், வணக்கமுடையவராய் இருத்தல். பெண்டிர் கணவனையன்றி வேறு தெய்வம் தொழார்.

பாடல்-89

பட்டாங்கே பட்டு ஒழுகும், பண்பு உடையாள்; காப்பினும்,
பெட்டாங்கு ஒழுகும், பிணையிலி; முட்டினும்,
சென்றாங்கே சென்று ஒழுகும், காமம்; கரப்பினும்,
கொன்றான்மேல் நிற்கும், கொலை.


     நல்ல பெண் காவலில்லாவிடினும் கற்பொழுக்கத்தையே மேற்கொண்டொழுகுவாள். அன்பில்லாதவள் (மனம் பொருந்தாதவள்) கணவன் காவல் செய்யினும் தான் விரும்பியவாறே பிறரைக் காதலித்து ஒழுகுவாள். காமவியல்புகள் எவ்வளவு இடையூறு ஏற்படினும் முன் நிகழ்ந்தவாறே நடக்கும். கொலைப்பழி எவ்வளவு மறைப்பினும் கொன்றான் மேலேயே வெளிப்படும்.

பாடல்-90

வன்கண் பெருகின், வலி பெருகும்; பால்மொழியார்
இன்கண் பெருகின் இனம்பெருகும்; சீர் சான்ற
மென்கண் பெருகின், அறம் பெருகும்; வன்கண்
கயம் பெருகின், பாவம் பெரிது.


     அஞ்சாமை மிகுந்தால் வலிமை மிகும். மனையாள் மாட்டுக் கருணை மிகுந்தால் இனம் பெருகும். அருள் மிகுந்தால் அறம் மிகும். கீழ்மைக் குணம் மிகுந்தால் தீவினை மிகும்.

No comments:

Post a Comment