பாடல்- 71.
ஊழியம் யாண்டு எண்ணி யாத்தன; யாமமும்
நாழிகையானே நடந்தன; தாழீயா,
தெற்றென்றார்கண்ணே தெளிந்தனர்; வெட்கென்றார்
வெஞ் சொலால் இன்புறுவார்.
ஊழிகள் ஆண்டுகளால் கணக்கிடப்பட்டு கழிந்தன. யாமம் நாழிகையால் வரையறுக்கப்பட்டு கழிந்தது. அறிஞர்கள் அறிந்தவர்களிடம் காலம் தாழாமல் ஐயம் திரிபறக் கேட்டுத் தெளிந்தனர். அறிவிலாதார் பிறரை நிந்தித்தே காலத்தைக் கழித்து மகிழ்கின்றனர்.
பாடல்-72
கற்றான் தளரின் எழுந்திருக்கும் கல்லாத
பேதையான் வீழ்வானேல், கால் முரியும்; எல்லாம்
ஒருமைத் தான் செய்த கருவி; தெரியின், மெய்
பொய்யா வித்து ஆகிவிடும்.
கல்வியறிவு உடையவன் தனக்குத் தளர்ச்சி ஏற்பட்டாலும் மேலும் முயன்று உயர்வான். கல்வியறிவு அற்றவன் தனக்கு ஏற்பட்டத் தளர்விலிருந்து மீளும் வழியறிய மாட்டான். யாருக்கும் ஒருபிறப்பின் செய்கைகள் மறுபிறப்பின் நுகர்ச்சிக்கு ஏதுக்களாகும். மெய்யுணர்வே வீடு பேற்றிற்கு வழி வகுக்கும்.
பாடல்- 73
தேவர் அனையர், புலவரும்; தேவர்
தமர் அனையர், ஒர் ஊர் உறைவார்; தமருள்ளும்
பெற்றன்னர், பேணி வழிபடுவார்; கற்றன்னர்,
கற்றாரைக் காதலவர்.
கல்வியறிவுடைய புலவர்களுக்கு தேவர்கள் ஒப்பாவர்; அப்புலவர் வாழும் ஊரில் வாழ்வோர் அத்தேவர்களின் உறவினருக்கு ஒப்பாவர்; அவ்வுறவினருள்ளும் அவர் அருள் பெற்றோர் பெற்றோரை ஒப்பாவர்; அப்புலவரை விரும்புவோர் அவரையே ஒப்பர்.
பாடல்-74
தூர்ந்து ஒழியும், பொய் பிறந்த போழ்தே; மருத்துவன்,
'சொல்' என்ற போழ்தே, பிணி, உரைக்கும்; - நல்லார்,
'விடுக!' என்ற போழ்தே விடுக! அதற்கு உரியான்,
'தா' எனின், தாயம் வகுத்து!
பொய் பிறந்தபோதே நட்புக் கெடும். மருத்துவன் சொல் என்ற போதே பிணியாளன் நோய் சொல்வான். பெரியோர் ஒரு செயலை விடு என்றதுமே விடுங்கள்.தானம் செய்ய நினைத்தவுடன் செய்க
பாடல்-75
நாக்கின் அறிப இனியவை மூக்கினான்
மோந்து அறிப, எல்லா மலர்களும்; நோக்குள்ளும்
கண்ணினான் காண்ப, அணியவற்றை; தொக்கு இருந்து,
எண்ணினான் எண்ணப்படும்.
சுவைக்கு இனியதை நாவினாற் சுவைத்து அறிவர். மலரின் மணத்தை மூக்கினால் முகர்ந்து அறிவர். அழகிய பொருள்களைக் கண்களாற் கண்டு அறிவர். உணரக் கூடிய கருத்துக்களைப் புலவர்கள் ஒன்றாய்க் கூடி ஆராய்ந்தறிவர்.
பாடல்-76
சாவாத இல்லை, பிறந்த உயிர் எல்லாம்;
தாவாத இல்லை, வலிகளும்; மூவா
இளமை இயைந்தாரும் இல்லை; வளமையில்
கேடு இன்றிச் சென்றாரும் இல்.
பிறந்த உயிர்கள் எல்லாம் இறவாதன இல்லை. கெடாத வலிமைகளும் இல்லை. மூவாத இளமைகளும் இல்லை. குறையாத செல்வங்களும் இல்லை.
பாடல்-77
சொல்லான் அறிப, ஒருவனை; மெல்லென்ற
நீரான் அறிப, மடுவினை; யார்கண்ணும்
ஒப்புரவினான் அறிப, சான்றாண்மை; மெய்க்கண்
மகிழான் அறிப, நறா.
ஒருவனுடைய நன்மை தீமைகளை அவன் கூறுஞ் சொற்களாலேயே அறிஞர்கள் அறிந்து கொள்வார்கள். மடுவின் மண் தன்மையை மென்மையான நீரால் அறிவர். பெருந்தன்மையை யார் மாட்டும் ஒப்ப நடக்கும் நடுநிலைமையால் அறிவர். கள் குடித்ததை அவனது உடம்பில் ஏற்படும் மாற்றத்தால் அறிவர்.
பாடல்-78
நா அன்றோ, நட்பு அறுக்கும்? தேற்றம் இல் பேதை
விடும் அன்றோ, வீங்கப் பிணிப்பின்? அவாஅப்
படும் அன்றோ, பல் நூல் வலையில்? அடும் அன்றோ,
மாறு உள் நிறுக்கும் துணிபு? 78
பதறிய நாக்கினால் நட்புக் கெடும். கட்டாயப்படுத்தினால் தெளிவில்லாத பேதை மக்களின் நற்செயல்கள் கெடும். நூல்களைப் பயில்வதால் மாணாக்கருக்கு அவாக்கெடும். பகைமைக் கண் ஒருவன் வைக்கும் தீராத பகைமையால் அவனே கெடுவான்.
பாடல்-79
கொடுப்பின், அசனம் கொடுக்க! விடுப்பின்,
உயிர் இடையிட்ட விடுக்க! - எடுப்பின்,
கிளையுள் அழிந்தார் எடுக்க! கெடுப்பின்,
வெகுளி கெடுத்துவிடல்.
ஒருவன் கொடுப்பதானால் ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும். ஒன்றை விடுவதானால் பற்றை விட வேண்டும். ஒருவரைத் தாங்கி மேலுயர்த்துவதானால் சுற்றத்தாருள் ஏழையாக உள்ளவரை மேல் உயர்த்த வேண்டும். கெடுப்பதானால் கோபத்தைக் கெடுக்க வேண்டும்.
பாட;-80
நலனும் இளமையும் நல்குரவின்கீழ்ச் சாம்;
குலனும் குடிமையும் கல்லாமைக்கீழ்ச் சாம்;
வளம் இல் குளத்தின்கீழ் நெல் சாம்; பரம் அல்லாப்
பண்டத்தின்கீழ்ச் சாம், பகுடு.
அழகும் இளமையும் வறுமையால் கெடும். குலத்துயர்வும், குலத்தொழுக்கமும் கல்லாமையால் கெடும். நீர் வருவாயற்ற ஏரியின் கீழ் விளையும் நெற்பயிர் கருகிப் போகும். சுமக்க முடியாத சுமையைத் தாங்கும் எருதுகள் இறக்கும்.
No comments:
Post a Comment