Monday, September 8, 2014

திரிகடுகம் - 26 முதல் 35 வரை



பாடல்-26

ஒல்வது அறியும் விருந்தினனும், ஆர் உயிரைக்
கொல்வது இடை நீக்கி வாழ்வானும், வல்லிதின்
சீலம் இனிது உடைய ஆசானும், - இம் மூவர்
ஞாலம் எனப் படுவார்.


     நல்ல விருந்தினனும், உயிரைக் கொல்லாது வாழ்பவனும், ஒழுக்கத்தை உடைய ஆசிரியனும் உயர்ந்தோர் ஆவார்.

பாடல்-27

உண் பொழுது நீராடி உண்டலும், என் பெறினும்
பால் பற்றிச் சொல்லா விடுதலும் தோல் வற்றிச்
சாயினும் சான்றாண்மை குன்றாமை, - இம் மூன்றும்
தூஉயம் என்பார் தொழில்.

     குளித்தபின் உண்ணுவதும், பொய் சொல்லாமல் இருத்தலும், தோல் வற்றிச் சுருங்கினாலும் நற்குணங்களில் இருந்து குறையாமையும், ஆகிய இம்மூன்றும் நல்லவர் செயல்களாகும்.

பாடல்- 28

வெல்வது வேண்டி வெகுண்டு உரைக்கும் நோன்பியும்,
இல்லது காமுற்று இருப்பானும், கல்விச்
செவிக் குற்றம் பார்த்திருப்பானும், - இம் மூவர்
உமிக் குற்றுக் கை வருத்துவார்.


     வெல்ல வேண்டி சினந்து சொல்கின்ற தவம் இல்லாதவனும், கிடைத்தற்கரிய பொருளை விரும்புபவனும், பிறன் கல்வியில் குற்றத்தைப் பார்ப்பவனும் ஆகிய இம்மூவரும் துன்பத்தையே அடைவர்.


பாடல்- 29

பெண் விழைந்து பின் செலினும், தன் செலவில் குண்றாமை;
கண் விழைந்து கையுறினும், காதல் பொருட்கு இன்மை;
மண் விழைந்து வாழ் நாள் மதியாமை; - இம் மூன்றும்
நுண் விழைந்த நூலவர் நோக்கு.


     தன்னைச் சேர விரும்பும் பெண்ணைச் சேராமையும், பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருத்தலும், வாழ்கின்ற காலத்தை மதிக்காமல் இருத்தலும் கற்றவர்களின் கருத்தாகும்.

பாடல்-30

தன் நச்சிச் சென்றாரை எள்ளா ஒருவனும்,
மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும்,
என்றும் அழுக்காறு இகந்தானும், - இம் மூவர்
நின்ற புகழ் உடையார்.

     தன்னை மதித்தவரை இகழாது இருத்தலும், செல்வம் வந்த போது நண்பர்களை மறவாமல் இருத்தலும், பகைவரின் செல்வம் கண்டு மகிழ்வதும் செய்தவர் அழியாப் புகழ் உடையார்.

பாடல்-31

பல்லவையுள் நல்லவை கற்றலும், பாத்து உண்டு ஆங்
இல்லறம் முட்டாது இயற்றலும், வல்லிதின்
தாளின் ஒரு பொருள் ஆக்கலும், - இம் மூன்றும்
கேள்வியுள் எல்லாம் தலை.


     நல்லவற்றைக் கற்றலும், இல்லாளோடு குறைவின்றி அறம் செய்வதும், முயற்சியால் செயற்கரிய செய்கையை முடித்தலும் சிறந்த கல்வியாகும்.

பாடல்-32

நுண் மொழி நோக்கிப் பொருள் கொளலும், நூற்கு ஏலா
வெண் மொழி வேண்டினும் சொல்லாமை, நல் மொழியைச்
சிற்றினம் அல்லார்கண் சொல்லலும், - இம் மூன்றும்
கற்றறிந்தார் பூண்ட கடன்.


     சொற்களை ஆராய்ந்து பொருள் கொள்ளுதலும், பயனற்ற சொற்களைச் சொல்லாதிருத்தலும், நல்ல சொற்களை கீழ்க்குலத்தார்க்குச் சொல்லுதலும் படித்தறிந்தவர் மேற்கொள்ள வேண்டிய கடமையாகும்.

பாடல்- 33

கோல் அஞ்சி வாழும் குடியும், குடி தழீஇ
ஆலம் வீழ் போலும் அமைச்சனும், வேலின்
கடை மணி போல் திண்ணியான் காப்பும், - இம் மூன்றும்
படை வேந்தன் பற்று விடல்!


     செங்கோலுக்கு பயந்த குடிமக்களையும், குடிமக்களை ஆலம் விழுது போல் தாங்கும் மந்திரியையும், எல்லையில் மணிபோல் உறுதியானவனின் திட்பமுடைய காவலையும் அரசன் விட்டுவிடாமல் இருக்கவேண்டும்.

பாடல்-34

மூன்று கடன் கழித்த பார்ப்பானும், ஓர்ந்து
முறை நிலை கோடா அரசும், சிறைநின்று
அலவலை அல்லாக் குடியும், - இம் மூவர்
உலகம் எனப்படுவார்.



     மூவர்க்குக் கடன் செய்த பார்ப்பானும், நீதி நிலையில் வழுவாத அரசனும், கவலையில்லாக் குடியும் உயர்ந்தோர் எனப்படுவர்.

பாடல்-35

முந்நீர்த் திரையின் எழுந்து இயங்கா மேதையும்,
நுண் நூல் பெருங் கேள்வி நூல் கரை கண்டானும்,
மைந் நீர்மை மேல் இன்றி மயல் அறுப்பான், - இம் மூவர்
மெய்ந் நீர்மைமேல் நிற்பவர்.


     கடலின் அலைபோல் எழுந்து தடுமாறாத அறிவுடையவனும், நுட்பமான நூல்களின் முடிவைக் கண்டானும், மனக்கலக்கம் ஒழித்தவனும், ஆகிய இம்மூவரும் அழியாத் தன்மை உடையவராவார்.

No comments:

Post a Comment