பாடல்- 11
கன்றாமை வேண்டும், கடிய; பிறர் செய்த
நன்றியை நன்றாக் கொளல் வேண்டும் - என்றும்
விடல்வேண்டும், தன்கண் வெகுளி; அடல்வேண்டும்,
ஆக்கம் சிதைக்கும் வினை.
ஒருவர் செய்த தீமைகளுக்காக அவரைக் கறுவாமை வேண்டும். ஆனால் அவர் செய்த நன்மைகளை மறவாமை வேண்டும். நம்மிடம் தோன்றும் கோபத்தை விட வேண்டும். பிறரது முன்னேற்றத்தைத் தடுக்கும் தவறான செயல்களை ஒழித்தல் வேண்டும்
பாடல்-12.
பல்லினான் நோய் செய்யும் பாம்பு எல்லாம்; கொல் களிறு
கோட்டான் நோய் செய்யும், குறித்தாரை; ஊடி,
முகத்தான் நோய் செய்வர், மகளிர்; முனிவர்
தவத்தின் தருக்குவர், நோய்.
பாம்பு தன்னுடைய பல்லினால் பிறருக்குத் துன்பம் தரும். கொல்லும் தன்மை கொண்ட காளை தன்னுடைய கொம்புகளால் பிறருக்குத் துன்பத்தைத் தரும். பெண்கள் தங்களின் ஊடலால் ஆண்களைத் துன்பப்படுத்துவர். தவ வலிமை கொண்ட முனிவர்கள் பிறரைச் சபிப்பதால் துன்பத்தைக் கொடுப்பர்.
பாடல்-13
பறை நன்று, பண் அமையா யாழின் நிறை நின்ற
பெண் நன்று, பீடு இலா மாந்தரின்; பண் அழிந்து
ஆர்தலின் நன்று, பசித்தல்; பசைந்தாரின்
தீர்தலின் தீப் புகுதல் நன்று.
பண் அமையாத யாழிசையை விட பேரோசை கொண்ட பறையே மேலானது. பெருந்தன்மை இல்லாத ஆண்மகனைவிட கற்புடன் திகழும் பெண்கள் உயர்வானவர். பதங்கெட்டு சுவையற்ற உணவை உண்ணுவதைவிட பசியுடன் இருத்தல் நல்லது. தன்னை விரும்பிய கணவனைப் பிரிந்து உயிர்வாழும் கொடுமையை விட தீயில் விழுந்து உயிர் விடுதல் நன்று.
பாடல்-14
வளப் பாத்தியுள் வளரும், வண்மை; கிளைக் குழாம்
இன் சொற் குழியுள் இனிது எழூஉம்; வன் சொல்,
கரவு எழூஉம், கண் இல் குழியுள்; இரவு எழூஉம்,
இன்மைக் குழியுள் விரைந்து.
செல்வ வளம் எனும் பாத்தியுள் ஈகைக் குணம் வளரும். இன்சொல் எனும் பாத்தியுள் உறவினர் கூட்டம் வளரும். கருணையற்ற கடுஞ்சொற்களைப் பேசும் பாத்தியுள் வஞ்சனை வளரும். வறுமையாகிய பாத்தியுள் இரத்தல் எனும் பயிர் விளையும்.
பாடல்-15
இன்னாமை வேண்டின், இரவு எழுக! இந் நிலத்து
மன்னுதல் வேண்டின், இசை நடுக! தன்னொடு
செல்வது வேண்டின், அறம் செய்க! வெல்வது
வேண்டின், வெகுளி விடல்!
ஒருவன் தனக்கு இழிவு வரவேண்டுமானால் பிறரிடம் கையேந்த வேண்டும். இந்நிலத்தில் நிலைத்து நிற்க வேண்டுமானால் புகழ் உண்டாகும்படியான செயலைச் செய்ய வேண்டும். தான் இறந்த பிறகு தன்னுடன் துணை வர வேண்டுமானால் தருமம் செய்ய வேண்டும். பிறரை வெற்றிக் கொள்ள வேண்டுமானால் கோபத்தை விட வேண்டும்.
பாடல்-16
கடற் குட்டம் போழ்வர், கலவர்; படைக் குட்டம்
பாய்மா உடையான் உடைக்கிற்கும்; தோம் இல்
தவக் குட்டம் தன்னுடையான் நீந்தும்; அவைக் குட்டம்
கற்றான் கடந்துவிடும்.
மரக்கலமுடையவர் கடலின் ஆழமான நீரைப் பிளந்து செல்வர். விரைந்து செல்லும் குதிரைப் படையை உடையவன் கடல் போன்று பகைவரது படையைப் பொருது உடைத்து விடுவான். தன் மனதைத் தன்வயப்படுத்தியவன் குற்றமில்லாத தவமென்னும் கடலை நீந்திச் செல்வான். தெளியக் கற்றவன் கற்றறிவுடையார் நிரம்பிய அவைக் கடலைக் கடந்து விடுவான்.
பாடல்-17
பொய்த்தல் இறுவாய, நட்புக்கண்; மெய்த்தாக
முத்தல் இறுவாய்த்து, இள நலம்; தூக்கு இல்
மிகுதி இறுவாய, செல்வங்கள்; தம் தம்
தகுதி இறுவாய்த்து, உயிர்.
நண்பர்கள் பொய் கூறும் இயல்பைப் பெறுவாராயின் அவர்களின் நட்புக் கெடும். மூப்பு தோன்றும் போது இளமை அழிந்துவிடும். மிகையான செயல்களைச் செய்யும் போது செல்வம் அழியும். வாழ்நாள் எல்லை கடந்ததும் உயிரும் அழியும்.
பாடல்-18
மனைக்கு ஆக்கம் மாண்ட மகளிர்; ஒருவன்
வினைக்கு ஆக்கம் செவ்வியன் ஆதல்; சினச் செவ் வேல்,
நாட்டு ஆக்கம் நல்லன் இவ் வேந்து என்றல்; கேட்டு ஆக்கம்
கேளிர் ஒரீஇவிடல்.
நல்லியல்பு கொண்ட பெண்களால் குடும்பம் சிறப்படையும். படைப்பயிற்சி சிறப்பாகக் கொண்டவன் போரில் வெற்றியைப் பெறுவான் செங்கோல் அரசன் நாட்டை உயர்த்துவான். உறவினரை ஒதுக்கியவன் கேட்டினை அடைவான்.
பாடல்-19
பெற்றான் அதிர்ப்பின், பிணை அன்னாள் தான் அதிர்க்கும்;
கற்றான் அதிர்ப்பின், பொருள் அதிர்க்கும்; பற்றிய
மண் அதிர்ப்பின், மன்னவன் கோல் அதிர்க்கும்; பண் அதிர்ப்பின்,
பாடல் அதிர்ந்துவிடும்.
கணவன் ஒழுக்கத்தில் கலங்கினால் அவன் மனைவி தன் கடமையில் கலங்குவாள். கற்ற புலவன் அறிவு கலங்கினால் அவனது கருத்துக்களும் கலங்கும். குடிமக்கள் நிலை கலங்கினால் மன்னனது ஆட்சி நடுங்கும். பண் அதிர்ந்தால் பாடலும் அதிர்ந்து விடும்.
பாடல்-20
மனைக்குப் பாழ், வாணுதல் இன்மை; தான் செல்லும்
திசைக்குப் பாழ், நட்டோரை இன்மை; இருந்த
அவைக்குப் பாழ், மூத்தோரை இன்மை; தனக்குப் பாழ்,
கற்று அறிவு இல்லா உடம்பு. 20
மனைவி இல்லாத வீடு பாழ். சார்ந்தொழுகும் நண்பர்கள் இல்லையெனில் தன் நிலை துன்பமாகும். கல்வி, கேள்விகளில் சிறந்த ஆன்றோரில்லாத அவை பாழானது. கற்றறிவில்லாத உடம்பு பாழானது.
No comments:
Post a Comment