பாடல்- 66
கொழுநனை இல்லாள் கறையும், வழி நிற்கும்
சிற்றாள் இல்லாதான் கைம் மோதிரமும்; பற்றிய
கோல் கோடி வாழும் அரசும், - இவை மூன்றும்
சால்போடு பட்டது இல.
புருஷன் இல்லாதவர் பூப்பும், சிற்றாள் இல்லாதவனுடைய மோதிரமும், கொடுங்கோல் அரசும் சிறப்பற்றவையாகும்.
பாடல்- 67
எதிர்நிற்கும் பெண்ணும், இயல்பு இல் தொழும்பும்,
செயிர் நிற்கும் சுற்றமும், ஆகி, மயிர் நரைப்ப,
முந்தைப் பழ வினையாய்த் தின்னும்; - இவை மூன்றும்
நொந்தார் செயக் கிடந்தது இல்.
சினத்தால் எதிர்த்துப் பேசும் மனையாளும், ஒழுக்கமில்லாத வேலையாட்களும், பகையான சுற்றமும் முற்பிறப்பிற் செய்த வினைப்பயனாகும். இவை முதுமைப் பருவம் வரைக்கும் ஒருவரை வருத்தக் கூடியது ஆகும்.
பாடல்-68
இல்லார்க்கு ஒன்று ஈயும் உடைமையும், இவ் உலகின்
நில்லாமை உள்ளும் நெறிப்பாடும், எவ் உயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையும், - இம் மூன்றும்
நன்று அறியும் மாந்தர்க்கு உள.
வறியவர்க்குக் கொடுக்கும் செல்வமும், நிலையாமையை எடுத்து உரைப்பதும், பிற உயிர்களுக்கு துன்பம் தரக்கூடிய செய்கைகளைச் செய்யாமல் இருப்பதும் அறவழி நிற்பவர் செய்கைகளாகும்.
பாடல்-69
அருந்தொழில் ஆற்றும் பகடும் திருந்திய
மெய் நிறைந்து நீடு இருந்த கன்னியும், நொந்து
நெறி மாறி வந்த விருந்தும், - இம் மூன்றும்
பெறுமாறு அரிய பொருள்.
உழவுச் செயலைச் செய்யும் எருதும், நெடுநாள் மணமின்றி இருந்த கன்னியும், பசித்து வந்த விருந்தினரும், பெறற்கரிய பொருள் ஆகும்.
பாடல்-70
காவோடு அறக் குளம் தொட்டானும், நாவினால்
வேதம் கரை கண்ட பார்ப்பானும், தீது இகந்து
ஒல்வது பாத்து உண்ணும் ஒருவனும், - இம் மூவர்
செல்வர் எனப்படுவார்.
சோலை, குளம் அமைத்தானும், வேதம் படித்த பார்ப்பானும், பிறர்க்குக் கொடுத்து உண்ணும் இல்லறத்தானும், உண்மையான செல்வர் எனப்படுவார்.
பாடல்-71
உடுத்தாடை இல்லாதார் நீராட்டும், பெண்டிர்
தொடுத்தாண்டு அவைப் போர் புகலும், கொடுத்து அளிக்கும்
ஆண்மை உடையவர் நல்குரவும், - இம் மூன்றும்
காண அரிய, என் கண்.
ஆடையின்றி நீராடுவதும், பெண்கள் வழக்கு தொடுத்தலும், கொடையாளர்கள் வறுமையும் பார்க்கத் தகுந்தன அல்ல.
பாடல்-72
நிறை நெஞ்சு உடையானை நல்குரவு அஞ்சும்;
அறனை நினைப்பானை அல் பொருள் அஞ்சும்;
மறவனை எவ் உயிரும் அஞ்சும்; - இம் மூன்றும்
திறவதின் தீர்ந்த பொருள்.
ஐம்புலன்களை அடக்கியவனைப் பார்த்து வறுமை பயப்படும். அறத்தையே நினைக்கின்றவனுக்கு பாவம் பயப்படும். கொலையாளிக்கு எல்லா உயிர்களும் பயப்படும். இம்மூன்றும் மிகவும் வலிமை மிக்கவனாகும்.
பாடல்-73
'இரந்துகொண்டு ஒண் பொருள் செய்வல்!' என்பானும்,
பரந்து ஒழுகும் பெண்பாலைப் பாசம் என்பானும்,
விரி கடலூடு செல்வானும், - இம் மூவர்
அரிய துணிந்து ஒழுகுவார்.
பிச்சை எடுத்துப் பெரும் பொருள் ஈட்டுபவனும், வேசியை நம்பும் காமுகனும், தக்க கருவிகள் இன்றி கடலில் பொருள் ஈட்டச் செல்லும் வணிகனும், தன் முயற்சியில் வெற்றி பெற மாட்டார்கள்.
பாடல்-74
கொலைநின்று தின்று ஒழுகுவானும், பெரியவர்
புல்லுங்கால் தான் புல்லும் பேதையும், 'இல் எனக்கு ஒன்று;
ஈக!' என்பவனை நகுவானும், - இம் மூவர்
யாதும் கடைப்பிடியாதார்.
கொலை செய்து உண்பவனும், பெரியோரைத் தழுவுகின்ற அறிவில்லாதவனும், இரப்பவனை இகழ்வானும் யாதொரு அறத்தையும் பின்பற்றாதவர் ஆவார்.
பாடல்-75
வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும், உள்ளத்து
உணர்வுடையான் ஓதிய நூலும், புணர்வின்கண்
தக்கது அறியும் தலைமகனும், - இம் மூவர்
பொத்து இன்றிக் காழ்த்த மரம். 75
கொடையாளியிடம் உள்ள செல்வமும், உள்ளத்தில் நினைத்துப் பார்க்கும் நூல் புலமையும், தன்னைச் சேர்ந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய காரியத்தை அறியும் தலைவனும், உறுதியான மனம் படைத்தவர்கள் ஆவார்.
No comments:
Post a Comment