Friday, September 26, 2014

நான்மணிக்கடிகை- 91 முதல் 101 வரை



பாடல்-91

இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்;
வளம் இலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்
கிளைஞர் இல் போழ்தில், சினம் குற்றம்; குற்றம்,
தமர் அல்லார் கையகத்து ஊண்.


    இளமைப் பருவத்தில் கல்லாமை குற்றம். செல்வ வளம் இல்லாதபோழ்து வள்ளல் தன்மையுடன் நடத்தல் குற்றம். உறவினர் துணையில்லாத போது பிறரைச் சினத்தல் குற்றம். உள்ளன்பு இல்லாதவர்களிடம் உணவு பெற்று உண்பது குற்றம்.

பாடல்-92

எல்லா இடத்தும் கொலை தீது; மக்களைக்
கல்லா வளரவிடல் தீது; நல்லார்
நலம் தீது, நாண் அற்று நிற்பின்; குலம் தீது,
கொள்கை அழிந்தக்கடை.


 எவ்வகையாலும் கொலை செய்தல் தீதாகும். குழந்தைகளைப் படிக்காமல் வளர்ப்பது தீதாகும். நாண் இல்லாத மகளிரின் அழகு தீதாகும். கொள்கை அழிந்து விட்டால் குலம் தீதாகும்.

பாடல்-93

ஆசாரம் என்பது கல்வி; அறம் சேர்ந்த
போகம் உடைமை பொருள் ஆட்சி; யார்கண்ணும்
கண்ணோட்டம் இன்மை முறைமை; தெரிந்து ஆள்வான்
உள் நாட்டம் இன்மையும் இல்


     நல்லொழுக்கம் என்பது கல்வியின் பயன். அறம் செய்து செல்வத்தை நுகர்தல் செல்வத்தின் பயன் ஆகும். யாரிடத்தும் பாரபட்சம் பாராமல் நடுவு நிலைமையோடு நிற்றல் அரசாளும் முறையாகும். பிறரோடு கலந்து ஆராய்ந்து அரசாள்பவன் தனக்குத் தானே ஆராய்ந்து செயல்படுவான்.

பாடல்-94

கள்ளின் இடும்பை களி அறியும்; நீர் இடும்பை
புள்ளினுள் ஓங்கல் அறியும்; நிரப்பு இடும்பை
பல் பெண்டிராளன் அறியும்; கரப்பு இடும்பை
கள்வன் அறிந்துவிடும்.


     கள் பெறாமையால் உண்டாகும் துன்பத்தைக் கள் குடியன் அறிவான். நீர் பெறாமையால் உண்டாகும் துன்பத்தை வானம் பாடிப் பறவை அறியும். வறுமைத் துன்பத்தை (பொருள் இல்லாததால்) பல மனைவியரைப் பெற்றவன் அறிவான். ஒன்றை ஒளித்து வைப்பதில் உள்ள துன்பத்தைத் திருடன் அறிவான்.

பாடல்-95

வடுச் சொல் நயம் இல்லார் வாய்த் தோன்றும்; கற்றார் வாய்ச்
சாயினும் தோன்றா, கரப்புச் சொல்; தீய
பரப்புச் சொல் சான்றார்வாய்த் தோன்றா; கரப்புச் சொல்
கீழ்கள் வாய்த் தோன்றிவிடும்.


     அன்பில்லாதவர் வாயில் பழிச் சொற்கள் தோன்றும். கற்றவர்கள் வாயில் வஞ்சனையான சொற்கள் தோன்றாது. சான்றோர்கள் வாயில் தீய சொற்கள் தோன்றாது. கீழ்மக்கள் வாயில் மறைக்கின்ற சொற்கள் வெளிப்படும்.

பாடல்-96

வாலிழையார் முன்னர் வனப்பு இலார் பாடு இலன்;
சாலும் அவைப்படின், கல்லாதான் பாடு இலன்;
கற்றான் ஒருவனும் பாடு இலனே, கல்லாதார்,
பேதையார், முன்னர்ப்படின்.


     அழகிய பெண்டிர்க்கு முன்னால் அழகில்லாத ஆண்கள் பெருமையடைதல் இல்லை. கற்றவர் கூடிய அவையில் கல்லாதவன் பெருமையடைதல் இல்லை. கல்லாதார் முன்பு கற்றானும் பெருமையடைதல் இல்லை. அறிவிலார் முன்பும் அறிஞர் பெருமையடைதலில்லை.

பாடல்-97

மாசு படினும், மணி தன் சீர் குன்றாதாம்;
பூசுக் கொளினும், இரும்பின்கண் மாசு ஒட்டும்;
பாசத்துள் இட்டு, விளக்கினும், கீழ் தன்னை
மாசுடைமை காட்டிவிடும்.


    அழுக்கு சேர்ந்தாலும் நன்மணியின் பெருமை குறையாது. கழுவி எடுத்தாலும் இரும்பில் மாசு உண்டாகும். கீழ் மக்களிடத்து பாசத்தைக் காட்டினாலும் அவர்கள் தங்கள் கீழ்மைத் தன்மையைக் காட்டிவிடுவர்.

பாடல்-98

எண் ஒக்கும், சான்றோர் மரீஇயாரின் தீராமை;
புண் ஒக்கும், போற்றார் உடனுறைவு; பண்ணிய
யாழ் ஒக்கும், நாட்டார் கழறும் சொல்; பாழ் ஒக்கும்,
பண்பு உடையாள் இல்லா மனை.

     சான்றோர்களைப் பிரியாமை அறிவுடைமையாகும். தம்மைப் போற்றி இணங்காதவரோடு வாழ்தல் புண்ணுக்கு நிகராகும். நண்பர்கள் இடித்துரைக்கும் சொல் வலியதாயினும் யாழோசைப்போல இனிமையுடையதாகும். மனைவி இல்லாத வீடு பாழ் மனையாகும்.

பாடல்-99

ஏரி சிறிதுஆயின், நீர் ஊரும்; இல்லத்து
வாரி சிறிதுஆயின், பெண் ஊரும்; மேலைத்
தவம் சிறிதுஆயின், வினை ஊரும்; ஊரும்,
உரன் சிறிதுஆயின், பகை.


     ஏரி சிறிதாக இருந்தால் நீர் வழிந்து போய்விடும். வீட்டில் வருவாய் குறைவானால் மனையாள் வரம்பு கடந்து பேசுவாள். முன் தவம் சிறிதானால் தீவினை மிகுந்து வருத்தும். வலிமை குறைந்தால் பகைவர் வென்றிடுவர்.

பாடல்-100

அலைப்பான், பிறது உயிரை ஆக்கலும் குற்றம்;
விலைப்பாலின் கொண்டு, ஊன் மிசைதலும் குற்றம்;
சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்;
கொலைப்பாலும் குற்றமே ஆம்.


     பிற உயிரை அழிப்பதற்காக வளர்த்தலும் குற்றம். விலை கொடுத்து பிற உயிரை வாங்கி அதன் ஊனை உண்ணுதல் குற்றம். சொல்லத் தகாத சொற்களைப் பேசுவதும் குற்றம். கொலை புரிதலும் குற்றமேயாகும்.

பாடல்-111

மனைக்கு விளக்கம் மடவாள்; மடவாள்-
தனக்குத் தகை சால் புதல்வர்; மனக்கு இனிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்,
ஓதின், புகழ் சால் உணர்வு.

     வீட்டுக்கு ஒளி மனைவி. மனைவிக்கு அழகு நன்மக்கள். நன்மக்களுக்கு அழகு கல்வி. கல்விக்கு விளக்கம் மெய்யுணர்வு.

மிகைப்பாடல்கள்

வைததனால் ஆகும் வசையே வணக்கமது
செய்ததனால் ஆகும் செழுங்கிளை - செய்த
பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த
அருளினால் ஆகும் அறம்.


    பிறரை வைதால் பகை உண்டாகும். வணங்கினால் உறவினர் மிகுவர். பொருளைக் கொடுத்தலால் இன்பம் உண்டாகும். இரக்கத்தினால் அருள் உண்டாகும்.

பாடல்-2

ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும்
ஒருவன் அறியா தவனும் - ஒருவன்
குணனடங்கக் குற்றமுள் ளானும் ஒருவன்
கணனடங்கக் கற்றானும் இல்.


     எல்லாக் கலைகளையும் அறிந்தவன் ஒருவனும் இல்லை. எதனையும் தெரியாதவனும் இல்லை. நல்ல பண்பு இல்லாத குற்றமே உடையவன் ஒருவனும் இல்லை. எல்லாம் கற்றவனும் இல்லை.

பாடல்-3

இன்சொலான் ஆகும் கிழமை இனிப்பிலா
வன்சொலான் ஆகும் வசைமனம் - மென்சொலின்
நாவினான் ஆகும் அருண்மனம் அம்மனத்தான்
வீவிலா வீடாய் விடும்.

     இன்சொல்லால் நட்பு உண்டாகும். கடுஞ்சொல்லால் கெடு நினைவு உண்டாகும். நயமான சொல்லால் அருள் நெஞ்சம் உண்டாகும். அவ்வருள் நெஞ்சத்தால் அழிவிலாத வீடுபேறு உண்டாகும்.

பாடல்-4

முனியார், அரிய முயல்வார்; அவரின்
முனியார், அறம் காமுறுவார்; இனிய
இரங்கார், இசைவேண்டும் ஆடவர்; அன்பிற்கு
உயங்கார், அறிவுஉடையார்.


     கோபம் இல்லாதவர், உண்மைப் பொருளை அறிய முயல்பவர், அறத்தினை விரும்புவர், புகழ் வேண்டுபவர், பிறரிடம் இரந்து வாழாதவர், அன்பிற்கு கட்டுப்படுபவர் அறிவுடையவர் ஆவார்.

1 comment:

  1. உங்ககளை நான் எப்படி தொடர்பு கொள்வது

    ReplyDelete